கடலூர் மாநகராட்சி அலுவலர்கள், தனியார் கட்டுமான உரிமையாளர்கள் மீது வழக்கு
கடலூரில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க லஞ்சம் பெற்றது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தனியார் கட்டுமான உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்க மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்களிடம் நேரடியாக லஞ்சம் பெறாமல் தனியார் கன்ஸ்ட்ரக்சன் மூலம் மறைமுகமாக லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிாிவின் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தலைமையிலான போலீசார், மாநகராட்சி அலுவலகம் மற்றும் புதுப்பாளையம், பாரதி சாலையில் உள்ள 4 கட்டுமான நிறுவனங்களில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனை முடிவில் 4 கட்டுமான நிறுவனங்களில் இருந்தும் முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத ரூ.5 லட்சமும் கைப்பற்றப்பட்டது. அந்த பணம் அரசு அலுவலா்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கமிஷன் தொகை என கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இதுகுறித்து மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் கீதா, லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் சாரதாம்பாள், ஆறுமுகம், முருகமணி மற்றும் மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரின் விசாரணைக்கு பிறகே, மாநகராட்சி அலுவலக ஊழியர்கள் யார்? யாரெல்லாம் லஞ்சம் பெற்றனர் என்பது குறித்த விவரம் தெரியவரும். இதனால் மாநகராட்சி ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.