தேனியில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்கு
தேனியில் ஆர்ப்பாட்டம் செய்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்பட 3 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தேனி பங்களாமேட்டில் அ.தி.மு.க.வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி பேசினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தும், தாக்கியும் பேசினார்.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அனுமதியின்றி கூட்டம் கூட்டினர் என்றும் தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமாரி, தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆர்.பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் ஜக்கையன் உள்பட 3 ஆயிரம் பேர் மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.