சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்கு
சமையல் தொழிலாளியை கத்தியால் குத்திய தந்தை-மகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளத.
கரூர் பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ரகு (வயது 36). சமையல் தொழிலாளி. இவரது சகோதரி பிரபா (35). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் (40) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரையும் ரகு கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிமாறன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் (22), பிரபா ஆகிய 3 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ரகுவை கத்தியால் குத்தினர். இதனை தடுக்க வந்த முருகேசன் என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரகுவின் மனைவி வித்யா கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள மணிமாறன், ஆகாஷ், பிரபா ஆகியோரை தேடி வருகின்றனர்.