பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 திருநங்கைகள் மீது வழக்கு
கரூரில் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கி பணம் பறிக்க முயன்ற 3 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 73). இவர் கரூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஆறுமுகம் பணியில் இருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய 3 திருநங்கைகள் ஒரு மொபட்டில் வந்து பெட்ரோல் போட்டுள்ளனர்.
பிறகு பெட்ரோலை போட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுமுகம் அவர்களிடம் பெட்ரோல் நிரப்பியதற்குரிய பணத்தை கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டினர்.
3 திருநங்கைகள் மீது வழக்கு
பின்னர் அவர் வைத்திருந்த பணத்தை பறிக்க முயன்று, அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதையடுத்து காயமடைந்த ஆறுமுகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்ெபக்டர் விதுன்குமார், திருநங்கைகள் 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.