சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியதாக 5 பேர் மீது வழக்கு
சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவெறும்பூர்:
மண் கடத்தல்
திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளபேட்டை பகுதியில், புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் கிராவல் மண் எடுக்க கனிமவளத்துறையிடம் உரிமை பெற்றுள்ளார். ஆனால் உரிமம் பெற்ற இடத்தை விட்டு, வேறொரு இடத்தில் நீண்ட நாட்களாக சட்ட விரோதமாக டிப்பர் லாரிகளில் கிராவல் மண் கடத்தப்படுவதாக திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது தலைமையிலான சிறப்பு படை போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, சட்ட விரோதமாக பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் கிராவல் மண் ஏற்றப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்து, திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது
மேலும் இது சம்பந்தமாக பத்தாளபேட்டை கிராம நிர்வாக அலுவலர் ராதிகா திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் புதுக்கோட்டை ராஜகோபாலத்தை சேர்ந்த சக்திவேல், கிழக்குறிச்சி முடுக்குப்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் தட்சிணாமூர்த்தி (50), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ராம கன்னகள்ளியை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் ராகுல் (23), ெபாக்லைன் எந்திர உரிமையாளர் தர்மபுரியை சேர்ந்த கருணாகரன் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் என 5 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தட்சிணாமூர்த்தி, ராகுல் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது விற்ற 2 பேர் கைது
*மணப்பாறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்களில் சட்ட விரோதமாக மது விற்ற கண்ணுடையான்பட்டி மேலகளத்தை சேர்ந்த செல்வராஜ்(40), அழகிரி ரெட்டியபட்டியை சேர்ந்த கோபால்(30) ஆகிய 2 பேர் மீதும் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
*மணப்பாறை ரெயில் நிலையம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து கிடந்தவர் மணப்பாறை பஸ் நிலையத்தில் யாசகம் பெற்று வந்தது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
* திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவ கல்லூரி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தமிழகத்தில் உள்ள சென்னை, திருச்சி, தர்மபுரி, ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததை கண்டித்தும் மத்திய அரசை கண்டித்தும், அங்கீகாரத்தை ரத்து செய்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.