மனையை கிரயம் செய்து தருவதாக கூறி நெய்வேலி முதியவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவா் மீது வழக்கு
மனையை கிரயம் செய்து தருவதாக கூறி நெய்வேலி முதியவரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,
நெய்வேலி,
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து ஊராட்சிக்குட்பட்ட டாக்டர் ராமதாஸ் சாலையில் வசித்து வருபவர் ஜார்ஜ் (வயது 70). இவருக்கு நண்பரான நெய்வேலி வட்டம் 17 பகுதியில் வசித்து வந்த ஷாகி கொரியன் என்பவர் மூலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவை சேர்ந்த ஜோஸ்மேனன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ஜோஸ்மேனன் சென்னை தையூர் கந்தசாமி நகரில் உள்ள 56 சென்ற இடத்தை பிளாட் போட்டு இருப்பதாகவும், அதில் ஒரு பிளாட் மனையை சதுர அடி ரூ.600-க்கு கிரயம் செய்து தருவதாகவும், கடந்த 8.4.2015 அன்று ரூ.5 லட்சத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கூறியுள்ளார். அதன்பிறகு பணத்தை பெற்றுக் கொண்ட ஜோஸ்மேனன் தான் கூறியபடி ஜார்ஜுக்கு இடத்தை கிரயம் செய்து கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஜார்ஜ் தன்னை மோசடி செய்த ஜோஸ் மேனன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நெய்வேலி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையிலும், நெய்வேலி நீதிமன்ற உத்தரவின் பேரிலும் ஜோஸ் மேனன் மீது நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.