பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பின் வாதம் நிறைவு 12-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பின் வாதம் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13-ந் தேதியன்று நிறைவடைந்துள்ளதால் தற்போது இவ்வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆகிய இருவரும் ஆஜராகினர். தொடர்ந்து, இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசு தரப்பின் வாதம் முடிவடைந்த நிலையில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பின் வக்கீல்கள் அப்துல்சலீம், இளம்பாரதி, பழனிவேல், கார்த்திகேயன், ரவீந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் கூறிய ஒரு சில வாதங்களுக்கு அரசு தரப்பு வக்கீல்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் உரிய விளக்கம் அளித்தனர். இந்த வாதம் முடிந்ததும், இவ்வழக்கின் விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) நீதிபதி புஷ்பராணி ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் அரசு தரப்பு வக்கீல்களும், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வக்கீல்களும் ஆஜராகி தாங்கள் தெரிவித்த வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டார்.