பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக்கோரி வழக்கு


பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக்கோரி வழக்கு
x

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. தெற்கு ரெயில்வே பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பூதிப்புரத்தைச் சேர்ந்த வக்கீல் ராஜசெல்வன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை-சென்னை இடையே பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் எல்.எச்.பி. என்ற நவீன பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்த ரெயிலில் இணைக்கப்படும் பெட்டிகளின் எண்ணிக்கை 24-ல் இருந்து 22 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் மட்டுமே உள்ளன. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டி இல்லை.

கடந்த 2016-க்கு முன்பு 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தபோது, முன்பதிவு செய்யாமல் பயணிக்க 3 பொது பெட்டிகள், பெண்களுக்கு தனியாக ஒரு பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டு இருந்தன. தற்போது முன்பதிவு இல்லாத 2 பெட்டிகளில் தினமும் சுமார் 600 பேர் பயணம் செய்கின்றனர்.

இந்த 2 பொதுப்பெட்டிகள் பயணிகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்பவர்கள், குறிப்பாக பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரெயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தெற்கு ரெயில்வே பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Related Tags :
Next Story