தேனூர் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி வழக்கு
தேனூர் அருகே வைகை ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் தொடரப்பட்டு உள்ளது.
மதுரை பரவையைச் சேர்ந்த அந்தோணிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், பரவை கண்மாய்க்கு வைகையில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த கண்மாய் தான் சுற்றுப்பகுதியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. வைகையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்து கால்வாய் மிகவும் சேதமடைந்துள்ளது. கால்வாய் பகுதியிலும், கண்மாயிலும் சீமை கருவேல மரங்கள் படர்ந்துள்ளன. போதிய அளவு தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாயை சீரமைக்கவும், கருவேல மரங்களை அகற்றி கண்மாய்க்கு முறையான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறும், வடக்கு தாலுகா தேனூர்-கொடிமங்கலம் இடையே வைகை ஆற்றில் தடுப்பணை அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11- ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.