தூத்துக்குடியில் 245 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கு:பா.ம.க. பிரமுகர், வக்கீல் உள்பட16 பேர் அதிரடி கைது


தூத்துக்குடியில் 245 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கு:பா.ம.க. பிரமுகர், வக்கீல் உள்பட16 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 30 Aug 2023 12:15 AM IST (Updated: 30 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 245 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கில் பா.ம.க. பிரமுகர், வக்கீல் உள்பட 16 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் 245 கிலோ கஞ்சா சிக்கிய வழக்கில் பா.ம.க. பிரமுகர், வக்கீல் உள்பட 16 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கார்களில் கஞ்சா கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தலை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் 2 சொகுசு கார்களில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி சுங்கச்சாவடி அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அடுத்தடுத்து வந்த 2 சொகுசு கார்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.

ரூ.50 லட்சம் மதிப்பு

அதில் 5 மூட்டைகளில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 245 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்தவர்களை மடக்கிப்பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் ஆந்திராவில் இருந்து கார்களில் கஞ்சாவை கடத்தி வந்து, தூத்துக்குடியில் பதுக்கி வைத்து இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது.

வக்கீல்-பா.ம.க. பிரமுகர்

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாதவநாயர் காலனியை சேர்ந்த ஆரோன் ராஜேஷ் (வயது 31), பாரதிநகரை சேர்ந்த இசக்கிகணேஷ் (29), வெளிமாநிலத்தில் சட்டம் படித்து வரும் நெல்லை டவுனை சேர்ந்த ஸ்ரீமதி (23), தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்த விக்னேசுவரன் (28), அருண்குமார் (27), 10-வது தெருவைச் சேர்ந்த திருமணி (29), வி.எம்.எஸ்.நகரை சேர்ந்த திருமணி குமரன் (27), மாதவநாயர் காலனியை சேர்ந்த ஷிவானி (34), பா.ம.க. பிரமுகர் மூக்காண்டி என்ற ராஜா (30), அண்ணாநகரை சேர்ந்த காளீசுவரன் (24), கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சரவணன் (45), சென்னை மயிலாப்பூர் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சம்பத்குமார் (50), நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஜோசப் கனூட் ஸ்ரீபாலன் (63), சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த தயாளன் (45), கன்னியாகுமரி ஹெலன் நகரை சேர்ந்த சிஜி ரெனி (35), சாத்தான்குளத்தை சேர்ந்த வக்கீல் மணிகண்டன் (38) ஆகிய 16 பேரும் ஈடுபட்டது தெரியவந்தது.

16 பேர் கைது

இதனை தொடர்ந்து போலீசார் 16 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார், ஒரு மோட்டார் சைக்கிள், 17 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 16 பேரையும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்.


Next Story