ஓமியோபதி டாக்டரிடம் பணம் பறித்த வழக்கு: 2 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலத்தில் ஓமியோபதி டாக்டரிடம் பணம் பறித்த வழக்கில் 2 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஓமியோபதி டாக்டர்
சேலம் அம்மாபேட்டை இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 50), ஓமியோபதி டாக்டர். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி மொபட்டில் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தாதம்பட்டியை சேர்ந்த செல்வம் (34), ரவிக்குமார் (29) ஆகியோர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி சேகரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் மொபட் ஆகியவற்றை பறித்துவிட்டு தப்பிசென்றனர்.
தண்டனை
இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், ரவிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் தலைமை குற்றவியல் கோர்ட்டில்நடந்தது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் ஓமியோபதி டாக்டரை மிரட்டி பணம் மற்றும் மொபட் பறித்த குற்றத்திற்காக செல்வம், ரவிக்குமார் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கிரிஸ்டல் பபிதா தீர்ப்பளித்தார்.