சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்ட வழக்கு: வேல்முருகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்ட வழக்கில் வேல்முருகன் எம்.எல்.ஏ. மீதான விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது சுங்கச்சாவடி அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ராஜேஷ் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன் வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிற நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜேஷ் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகினர். வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.