உளுந்தூர்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம்: தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
உளுந்தூர்பேட்டை அருகே போலி வாரிசு சான்றிதழ் பெற்று நிலத்தை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் தாசில்தார் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தை சேர்ந்தவர் முடியப்பன் மனைவி மரியா கிளாரா (வயது 54). மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மகன் மகிமைராஜ் பெயரில் இறையூரில் நிலம் வாங்கியுள்ளார். அப்போது மகிமைராஜ் மைனர் என்பதால் அவரது தாய் கிறிஸ்துமேரியை அந்த நிலத்திற்கு பொறுப்பாக பதிவு செய்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டில் கிறிஸ்துமேரி இறந்தார். இதையடுத்து மரியா கிளாராவின் தம்பியான ஜோசப்ராஜ்(52), கடந்த 2019-ம் ஆண்டு தனது தாயார் கிறிஸ்து மேரி உயிரிழந்ததாக பொய்யாக வாரிசு சான்றிதழ் பெற்று மரியா கிளாரா தனது மகன் மகிமை ராஜ் பெயரில் வாங்கிய இடத்தை ஜோசப்ராஜ் தனது மனைவி நம்பிக்கை மேரியின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இது குறித்து மரியா கிளாரா உளுந்தூர்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் வழக்கப்பதிவு செய்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி போலியாக வாரிசு சான்றிதழ் பெற்ற ஜோசப்ராஜ், அவரது தம்பி ஆரோக்கியதாஸ் மற்றும் கடந்த 2019-ம் ஆண்டில் உளுந்தூர்பேட்டை தாசில்தாராக பணிபுரிந்த வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் வெங்கடாஜலபதி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமர்நாத் உள்ளிட்ட 5 பேர் மீது எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.