வல்லக்கடவு வழியாக என்ஜினீயர்கள் சென்று முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு - அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வல்லக்கடவு வழியாக என்ஜினீயர்கள் சென்று முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி வழக்கு - அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

வல்லக்கடவு வழியாக என்ஜினீயர்கள் சென்று முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரிய வழக்கு குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


வல்லக்கடவு வழியாக என்ஜினீயர்கள் சென்று முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரிய வழக்கு குறித்து அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அணை பலப்படுத்தும் பணி

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ரெங்கன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த என்ஜினீயர் அசோசியேசன் செயலாளராக உள்ளேன். நீர்வள ஆதார அமைப்பில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டேன். கேரள மாநிலம் தேக்கடி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை விளங்குகிறது. இந்த அணையில் 152 அடி வரை நீர் தேக்கலாம். ஆனால் கேரள அரசின், நிர்ப்பந்தங்களால் 152 அடி வரை தண்ணீர் தேக்கிவைக்க முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றால், அணையை பலப்படுத்த வேண்டும். இதற்காக தமிழக என்ஜினீயர்களின் முயற்சிக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கேரளாவின் அனுமதி தேவையில்லை

தமிழக என்ஜினீயர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப் பாதை வழியாகச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் கேரள அரசு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான 1886-ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, அணையை பராமரிக்க கேரள அரசின் அனுமதி தேவையில்லை.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த என்ஜினீயர்கள் வல்லக்கடவு நிலப் பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணையை சென்று அடைவதற்கு உத்தரவிட வேண்டும். இதற்காக 23 மரங்களை வெட்டுவது மற்றும் பேபி அணையை பழுதுபார்க்கவும், பலப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இதுகுறித்து, பெரியாறு அணையின் மதுரை நிர்வாக என்ஜினீயர், தேனி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும் இதே போன்ற கோரிக்கையுடன் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story