செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கு - மாலை 4 மணிக்கு தீர்ப்பு..!


செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய வழக்கு - மாலை 4 மணிக்கு தீர்ப்பு..!
x

செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை மனு மீது சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறுகிறது.

சென்னை,

சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், அமலாக்கத்துறை சிறப்பு அரசு வக்கீல் ரமேஷ் ஆகியோரும், செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவும் ஆஜராகி வாதாடினார்.

அப்போது சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என்று விவாதம் நடந்தது.

இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி, கோர்ட்டில் ஆஜராகி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் வாக்குமூலம் அளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார்.

அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை வழக்கில் அனைத்து வாதங்களும் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Next Story