குஜிலியம்பாறை அருகே பெண்ணிடம் பணம், தங்க சங்கிலி பறிப்பு
குஜிலியம்பாறை அருகே பெண்ணிடம் பணம், தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.
குஜிலியம்பாறை அருகே உள்ள தி.கூடலூரை சேர்ந்தவர் வாசுகி (வயது 46). இவர், திருமக்கம்பட்டியை சேர்ந்த காளியம்மாளிடம் ரூ.75 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடனை திருப்பி கொடுப்பதற்காக, திருமக்கம்பட்டிக்கு ரூ.75 ஆயிரத்துடன் தனது மொபட்டில் வாசுகி சென்று கொண்டிருந்தார். குஜிலியம்பாறை அருகே ஆலமரத்துகுளம் என்ற இடத்தில் மொபட் சென்று கொண்டிருந்தது.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென வாசுகியின் மொபட்டை வழிமறித்து நிறுத்தினார். பின்னர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ரூ.75 ஆயிரம், 3 பவுன் தங்க சங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் வாசுகி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.