நகரமன்றத்தில் சாதி அரசியலா? துணை தலைவருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம்


நகரமன்றத்தில் சாதி அரசியலா? துணை தலைவருக்கும், கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம்
x

திண்டிவனம் நகரமன்றத்தில் சாதி அரசியல் நடக்கிறதா? என துணை தலைவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவருக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

கூட்டம் தொடங்கியதும் நகர மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் கூறுகையில், நகர மன்ற தலைவருக்கு அருகில் எனக்கு இருக்கை வசதி கொடுத்தால் 10 கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளியே சென்று விடுவார்கள் என நகர மன்ற தலைவரின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார், ஆதலால் அந்த 10 கவுன்சிலர்கள் யார்? என்பதை தெரிவிக்க வேண்டும், இந்த நகரமன்றத்தில் சாதி அரசியல் நடக்கிறதா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.

வாக்குவாதம்

அதற்கு நகரமன்ற கவுன்சிலர் ரவிச்சந்திரன் மறுப்பு தெரிவித்து கூறுகையில், இது பொய்யான தகவல். நான் அரசியலுக்கு வந்ததில் இருந்து அனைவரிடமும் சமமாகத்தான் பழகி வருகிறேன். சாதி வேறுபாடு பார்ப்பதில்லை. எங்கள் கட்சி தி.மு.க. சமூக நீதியை பின்பற்றும் கட்சியாகும்.

இதுபோன்ற பொய்யான தகவலை தெரிவித்து எங்கள் ஆட்சிக்கும், கூட்டணிக்கும், இந்த மன்றத்தின் மீதும் களங்கத்தையும், அவதூறையும் எழுப்ப நினைப்பது சரி இல்லை என்றார்.

அப்போது துணை தலைவருக்கும், கவுன்சிலர் ரவிச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது சக கவுன்சிலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்

அதனை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கூறுகையில், வரிகளை வசூலிப்பதில் நகராட்சி நிர்வாகம் கடும் கெடுபிடி காட்டுவதால் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ளி அப்புறப்படுத்தபடுவதில்லை. குடிநீர் பிரச்சினைகளும் உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

கூட்டத்தில் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story