16 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் பள்ளி மாணவனை கொடூரமாக குரங்கு தாக்கிய சம்பவம் எதிரொலியாக 16 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியர்புரம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருடைய மகன் கவின் (வயது 14). விக்கிரமசிங்கபுரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். 2 வீடுகளை கடந்து சென்றபோது வெள்ைள மந்தி குரங்கு ஒன்று திடீரென கவின் மீது பாய்ந்து கடித்து குதறியது.இதில் படுகாயம் அடைந்த அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள மந்தி குரங்குகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடையம் வனச்சகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் அந்த பகுதியில் இரும்பு கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் நேற்று 2 குட்டிகள் உள்பட 16 வெள்ளை மந்தி குரங்குகள் பிடிபட்டன. பிடிபட்ட குரங்குகள் மணிமுத்தாறு அடர் வனப்பகுதியில் விடப்படும் எனவும், தொடர்ந்து அந்த பகுதியில் கூண்டு வைத்து மீதமுள்ள குரங்குகள் பிடிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.