காட்டு யானையை பிடிக்க வேண்டும்
மாவனல்லா, வாழைத்தோட்டம் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
மாவனல்லா, வாழைத்தோட்டம் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காட்டு யானை
மசினகுடி அருகே மாவனல்லா மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் காட்டு யானை தினமும் ஊருக்குள் வருகிறது. சில சமயங்களில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களை துரத்துகிறது. மேலும் வாழை, தென்னை மரங்கள் மற்றும் பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஊருக்குள் வந்து யானை அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் நிம்மதியை இழந்தனர்.
தொடர்ந்து கிராமங்களின் கரையோரம் முகாமிட்டு வருவதால் அச்சமடைந்து உள்ளனர். கடந்த காலங்களில் மாவனல்லா அருகே கூலி வேலைக்கு சென்ற பெண் ஒருவரை காட்டு யானை தாக்கி கொன்றது. அதைத்தொடர்ந்து வாழைத்தோட்டம் கிராமம் அருகே ஆடு மேய்த்து கொண்டிருந்த பெருமாள் என்ற முதியவரையும் தாக்கி கொன்றது. இந்த யானையால் வாகன ஓட்டிகளும் அச்சமடைந்து வருகின்றனர்.
பிடிக்க கோரிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, குறிப்பிட்ட ஒரு காட்டு யானை அடிக்கடி வாழைத்தோட்டம், மாவனல்லா கிராமங்களுக்குள் வந்து தாக்குவதால் மனித உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க வனத்துறையினர் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து சிங்காரா வனச்சரகர் ஜான் பீட்டர் கூறியதாவது:-
சம்பந்தப்பட்ட யானை ஊருக்குள் வந்து பழகிவிட்டது. அதை தடுக்க வன ஊழியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இரவு, பகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில சமயங்களில் வேறு வழியாக ஊருக்குள் வந்து விடுகிறது. மேலும் கர்நாடகா வனப்பகுதிக்கு விரட்டும் பணி நடைபெற்றது. ஆனால், யானை செல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் வன ஊழியர்கள் கொண்ட குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.