சேலம் மாவட்டம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாட்டம்கால்நடைகளுக்கு பூஜை செய்து வழிபாடு
சேலம் மாவட்டம் முழுவதும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. அப்போது கால்நடைகளுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தேவூர்,
மாட்டு பொங்கல்
சேலம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இன்றும் பழமை மாறாமல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி பண்டிகை நாளில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூலப்பூ ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கோவில், வீடு மற்றும் விவசாய நிலங்களில் வைத்து காப்புக்கட்டு விழா நடத்தினர்.
தொடர்ந்து பொங்கலன்று தங்களது வீடுகளின் முன்பு கோலமிட்டு செங்கரும்பு நட்டு பொங்கல் விழா நடத்தினர். பொங்கலுக்கு மறுநாள் சேலம் மாவட்டம் முழுவதும் மாட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கால்நடைகளுக்கு பூஜை
தேவூர் அருகே அக்கரைக்காடு அண்ணமார் கோவில் சன்னதி முன்பு மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அண்ணமார் கோவில் சன்னதி முன்பு மண்பானையில் பச்சரிசி பொங்கல் வைத்தனர்.
பசு மாடு, காளை மாடு, ஆடு, எருமை உள்ளிட்ட கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளில் வர்ணம் பூசினர். கழுத்தில் மஞ்சள் கொத்து கட்டி வரிசையாக நிற்க வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட பொருட்களை கால்நடைகளுக்கு உணவாக கொடுத்தனர்.
பட்டி பொங்கல்
இதேபோல் சென்றாயனூர், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், செங்கானூர், சின்னாம்பாளையம், புதுப்பாளையம், கோணகழுத்தானூர், புள்ளாகவுண்டம்பட்டி, காவேரிபட்டி, சுண்ணாம்புகரட்டூர், வட்ராம்பாளையம், எல்லப்பாளையம், கல்லம்பாளையம், பச்சபாலியூர், நல்லங்கியூர், கொட்டாயூர், கல்வடங்கம், மயிலம்பட்டி, தண்ணிதாசனூர், பொன்னம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலும் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.
மேலும் ஆடுகளை வளர்ப்போர் பட்டி பொங்கல் என பெயரிட்டு கால்நடைகளை அடைக்கும் மூங்கில் பட்டியில் பொங்கல் விழா கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
தலைவாசல்
தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர் பஸ் நிறுத்தம் அருகில் புற்று மாரியம்மன் கோவில் முன்பு மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. கால்நடைகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி கோவில் வளாகத்தில் நிறுத்தினர். பின்னர் புற்று மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து கால்நடைகளுக்கு சர்க்கரை பொங்கல், அகத்திக்கீரை உணவாக கொடுக்கப்பட்டது. மேலும் மாட்டு கொட்டகையில் கரும்பு,மஞ்சள் வைத்து அலங்கரிக்கப்பட்டது. சர்க்கரை பொங்கல், வாழைப்பழம், தேங்காய் படையலிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கால்நடைகளுக்கு விவசாயிகள் உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது.