காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக: மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு -முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்
காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.
சேலம்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 10-ந்தேதி சேலம் வந்தார்.
சேலம் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையை திறந்து வைத்த அவர், கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதன்பின்பு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
நேற்று முன்தினம் சேலம் கோனூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
இதைத்தொடர்ந்து நேற்று காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து விட்டார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மின் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து வைக்க அனைத்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் பாய்ந்தோடியது. சீறிப்பாய்ந்த தண்ணீரில் மு.க. ஸ்டாலின் மலர் தூவினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
125 டி.எம்.சி. தண்ணீர்
நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாகவும், நீர் இருப்பு 69.252 டி.எம்.சி ஆகவும் இருந்தது.
காவிரி டெல்டா பகுதி குறுவை சாகுபடிக்காக செப்டம்பர் 15-ந் தேதி வரை 5 லட்சத்து 26 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 125 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்கு மேட்டூர் அணையில் இருந்து 99.74 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுகிறது. மீதமுள்ள 25.26 டி.எம்.சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.
ஜூலை மாதத்தில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியும், ஆகஸ்டு மாதத்தில் வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியும் தேவைக்கேற்ப தண்ணீர் வழங்கப்பட உள்ளது.
சம்பா, தாளடி பாசனம்
சம்பா மற்றும் தாளடி பாசனத்துக்கு செப்டம்பர் 15-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 28-ந் தேதி வரை 12 லட்சத்து 10 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 205.60 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். இதற்கு அணையில் இருந்து 108.50 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 97.10 டி.எம்.சி. தண்ணீர் பருவமழை மற்றும் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.
குறுவை, சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்காக செப்டம்பர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும் அடுத்த 15 நாட்களுக்கு படிப்படியாக வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வழங்கப்படுகிறது.
அக்டோபர் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வீதமும், அடுத்த 15 நாட்களுக்கு நீர் தேவைக்கேற்ப வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதமும் வழங்கப்பட உள்ளது.
ஒத்துழைக்க வேண்டுகோள்
நவம்பர், டிசம்பர் மாதத்திற்கு தண்ணீர் தேவைக்கேற்ப வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதமும், ஜனவரி மாதத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதமும் தண்ணீர் வழங்கப்படுகிறது. பாசன தேவையை பொறுத்து அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் அளவினை உயர்த்தியும் குறைத்தும் வழங்கப்பட உள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நிலைமைக்கேற்ப தண்ணீரை முறைவைத்து பயன்படுத்த அலுவலர்களுடன் ஒத்துழைக்குமாறு நீர்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.