காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்-விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்
சிவகங்கை உள்பட 7 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காளையார்கோவில்
சிவகங்கை உள்பட 7 மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயனடையும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விவசாயிகள் சங்க மாநாடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட 8-வது மாநாடு காளையார்கோவிலில் நடந்தது. இதையொட்டி நடந்த விழிப்புணர்வு . ஊர்வலத்தை மாவட்ட குழு உறுப்பினர் அழகர்சாமி தொடங்கி வைத்தார். மாநாட்டு கொடியை மாவட்ட குழு உறுப்பினர் மாணிக்கம் ஏற்றி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் மோகன் வரவேற்றார். மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் சாத்தப்பன் தொடக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் முகமது அலி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் வீரபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் மாவட்ட தலைவராக வீரபாண்டியும், செயலாளராக அரு.மோகனும், பொருளாளராக விஸ்வநாதனும், துணை தலைவராக ஜெயராமனும், துணைச் செயலாளர்களாக அழகர்சாமி, ஆறுமுகம், அண்ணாதுரை ஆகியோர் 7 பேர் கொண்ட நிர்வாகிகளும், மாநில மாநாட்டு பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டனர். காளையார்கோவில் ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு நன்றி கூறினார். ஊர்வலத்தில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இணைப்பு திட்டம்
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிவகங்கை மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். காவிரியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் வீணாக கலக்கும் இந்த தண்ணீரை சிவகங்கை மாவட்டம் உள்பட 7 மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை கணக்கில் கொண்டு காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த 2008-ம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கு அப்போது ரூ.3,200 கோடி தேவை என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் செயல்படுத்தினால் 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயனடைவார்கள். பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், காளையார்கோவிலில் சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் நினைவிடம் உள்ளது. இதை சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டும் அதற்கான பணியை இதுவரை செயல்படுத்தவில்லை. எனவே உடனடியாக அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.