காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த நாள்
திருச்செந்தூர் அருகே காயாமொழி சி.பா.ஆதித்தனார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரளி மனோகர் தலைமை தாங்கினார். காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்தியபாமா, செயலாளர், சுந்தர், வக்கீல் முத்துக்குமார், முன்னாள் மாணவர்கள் பேரவை செயலாளர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினாடி வினா, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவிய போட்டி போன்றவை நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், வக்கீல் சதீஷ் பாலன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முடிவில், பள்ளி ஆசிரியர் பவுல்ராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முன்னாள் மாணவர் பேரவை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், வக்கீல் சுந்தரபாபு, முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேப்பங்காடு
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காடு சி.பா.சிவந்தி ஆதித்தனார் உயர் நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி செயலாளர் ஆதிலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி கமிட்டி தலைவர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.
விழாவில் பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியபோட்டி, கவிதை போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி செயலாளர் ஆதிலிங்கம் பரிசுகள் வழங்கி மாணவர்களை பாராட்டினார்.
விழாவில் ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, முத்துலட்சுமி, சகுந்தலா தேவி, கோல்டா மேயர் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஆசிரியை அழகுமணி நன்றி கூறினார்.
சில்லாங்குளம்
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. முத்துக்கருப்பன் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனரும், பள்ளி தலைமை ஆசிரியருமான பாலமுருகன் கருப்பசாமி தலைமை தாங்கி, காமராஜர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் அறக்கட்டளை நிர்வாக கண்காணிப்பாளரும், சில்லாங்குளம் பஞ்சாயத்து தலைவருமான சரோஜா கருப்பசாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் நிர்மலாபாலமுருகன், நிர்வாக மேற்பார்வையாளர் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முத்துக்கருப்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆழ்வார்திருநகரி
ஆழ்வார்திருநகரியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற காமராஜரின் பிறந்த நாள் விழாவுக்கு ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சாரதா பொன் இசக்கி தலைமை தாங்கினார். மருத்துவர் அணி துணை அமைப்பாளர் பொன் இசக்கி முன்னிலை வைத்தார். ஆழ்வார்திருநகரி பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியினரும் மற்றும் கூட்டணி கட்சியினரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் மகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், வக்கீல் வில்லின் பெலிக்ஸ், திருப்பணி செட்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் மற்றும் காடுவெட்டி பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாசரேத்
நாசரேத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருமறையூரில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஷிவா எர்த் மூவர்ஸ் உரிமையாளர் முருகதுரை தலைமை தாங்கினார். காமா ஊழியம் நிறுவனர் சாமுவேல் ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். நாசரேத் நகர வணிகர் சங்க செயலாளர் செல்வன், நாசரேத் நகர பஞ்சாயத்து தலைவர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வணிகர் சங்கம் தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தொகுதி செயலாளர் ஜான், நாசரேத் வியாபாரிகள் சங்க துணை தலைவர் ஞானையா, நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல்
ஏரல் அருகே உள்ள வாழவல்லான் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூ.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனசிங் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வின் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக வாழவல்லான் ஏ.சி.தங்கம் கலந்துகொண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை ஜாய்ஸ் வழங்கினார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் பவுன்ராஜ் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு எம்.சவேரியார்புரம் அருகில் உள்ள ராஜீவ்நகரில் காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் நடைபெற்ற விழாவில், மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவியாக, நோட்டு புத்தகங்கள், தையல் எந்திரங்கள், வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டது.
குலசேகரன்பட்டினத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உடன்குடி வட்டார துணைத் தலைவர் எஸ்.ரஹ்மத்துல்லா முன்னிலை வகித்தார்.
உடன்குடி
உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர் செல்வி வரவேற்றார். உதவி ஆசிரியர் மகாலிங்கம், காமராஜர் சிறப்புகள் குறித்து பேசினார். மாவட்ட முன்னாள் காங்கிரஸ் பொருளாளர் நடராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.
மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓவிய போட்டியில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜெயசுதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.