அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததையடுத்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட தீர்மானம் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் சுடலை தலைமை தாங்கினார். அவைத்தலைவர் முத்துக்குமாரசாமி, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வெள்ளப்பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில், மைமூன் பீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, நகர அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அறிவுரையின் பேரில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் கணேசன் தலைமை தாங்கினார். நகர கழக நிர்வாகிகள், வார்டு பிரதிநிதிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனா். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் பழைய பஸ் நிலையம் முன்பு நகர அவைத்தலைவர் வேலுசாமி உள்ளிட்டோரும், கடையம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ராஜசேகர் தலைமையிலும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.வி.முருகேசன் தலைமையில், துணை செயலாளர் உச்சிமாகாளி, பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலையில் பொட்டல்புதூரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர். பணகுடி நகர துணை செயலாளர் ஜோபி ஜெகன் தலைமையிலும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.