அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியதையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்ட தீர்மானம் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. இதையொட்டி நெல்லையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். இதுதவிர வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை முன்னீர்பள்ளம் தேவர்சிலை அருகில் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், புதுக்குளம் பஞ்சாயத்து தலைவருமான சி.முத்துக்குட்டிபாண்டியன் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச்செயலாளர் பூலான், பொருளாளர் ரமேஷ் என்ற நயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராதாபுரத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள் தலைமையில், அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். மாவட்ட இளைஞர் பாசறை துணை செயலாளர் பாலரிச்சர்ட், ஜெயலலிதா பேரவை தலைவர் சுந்தரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பை பூக்கடை பஜாரில் நகர செயலாளர் அறிவழகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதேபோல் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நகர மாணவரணி செயலாளர் வக்கீல் கணேச பெருமாள் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, முன்னாள் நகர செயலாளர் ஐசக்பாண்டியன், இளைஞர் பாசறை செயலாளர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், நகர அவைத்தலைவர் லிங்கத்துரை மற்றும் பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.