பாளையம்புதூரில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்-கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது
பாளையம்புதூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சுகாதார மற்றும் சமத்துவ பொங்கல் விழா கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
சமத்துவ பொங்கல் விழா
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தந்த ஊராட்சிகளில் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவையொட்டி அந்தந்த கிராமங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர்கள் போடப்பட்டன. மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் மற்றும் கோலப்போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஊராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். சமத்துவ பொங்கல் விழாவையொட்டி அனைத்து கிராமங்களும் விழாக்கோலம் பூண்டது.
கலெக்டர் பங்கேற்பு
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பாளையம்புதூர் தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற மகளிர் கோலப்போட்டி, சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், மாறுவேடப்போட்டி, கவிதை போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சாந்தி பரிசு வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் சென்னை ஊரக வளர்ச்சி துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் தீபனாவிஸ்வேஸ்வரி, உதவி கலெக்டர் கீதா ராணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மாலா, பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், துணைத்தலைவர் விஜயராகவன், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கவுரி, ஷகிலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தி உள்பட தொடர்புடைய அலுவலர்கள், சமத்துவப்புர குடியிருப்போர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.