தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் உலக யோகா தினம் கொண்டாட்டம்


தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உலக யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு ேயாகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

யோகா தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

அரசு ஆஸ்பத்திரி

அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு டீன் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி முன்னிலை வகித்தார். யோகா டாக்டர் திருமுருகன் அனைவருக்கும் யோகா பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் நர்சிங் கல்லூரி மாணவிகள், நர்சுகள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

சுங்க அலுவலகம்

தூத்துக்குடி மத்திய சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு கோட்ட அலுவலகத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுங்க உதவி ஆணையர் நரசிம்மன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போன்று தூத்துக்குடி ஆயுதப்படை போலீசாரும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சேவாலயா டிரஸ்ட் செயலாளர் ராஜாகாந்தி தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் ஜெயா சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் யோகாசனம் செய்தனர்.

இஞ்ஞாசியார் பள்ளி

தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ள தாளாளர் ராஜேஸ் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். புருஸ்லி அகாடமி நிறுவனர் சுப்புராஜ் யோகா பயிற்சி அளித்தார். நிகழ்ச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அலெக்ஸ் செய்து இருந்தார்.

மீன்வளக்கல்லூரி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆயுஷ் மருத்துவப்பிரிவு சார்பில் மீன் வளக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி தலைமை தாங்கி, யோகாவால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மீன்வளக்கல்லூரி முதல்வர் சாந்தகுமார், ஆயுஷ் மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ், பேராசிரியர்கள் நடராஜன், பார்த்திபன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story