கந்துவட்டி புகாரில் பிரபல ரவுடி கைது


கந்துவட்டி புகாரில் பிரபல ரவுடி கைது
x

தா.பழூர் அருகே கந்துவட்டி புகாரில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

கடன்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனியை சேர்ந்தவர் தேவதாஸ் மகன் தமிழ்வாணன். இவர் அதே ஊரை சேர்ந்த திருநாராயணசாமி (வயது 43) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாய பணிகளுக்காக ரூ.16 ஆயிரத்து 500 கடனாக பெற்று உள்ளார். அந்த ஆண்டு அறுவடை முடிந்தவுடன் மொத்த தொகையில் ரூ.10 ஆயிரத்தை திரும்ப கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தா.பழூரில் உள்ள ஒரு உணவகத்தில் தமிழ்வாணன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த திருநாராயணசாமி அவரிடம் வாங்கிய கடனை திருப்பி தரச்சொல்லி கேட்டுள்ளார். தற்போது சற்று சிரமமாக இருப்பதாகவும் விரைவில் கடனை அடைத்து விடுவதாகவும் தமிழ்வாணன் கூறியுள்ளார். அதற்கு இதுவரை தமிழ்வாணன் கொடுத்த பணம் வட்டிக்கு சரியாகிவிட்டது என்றும், தற்போது கணக்கு பார்க்கும் பொழுது இன்னும் ரூ.30 ஆயிரம் தர வேண்டி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்வாணன் அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது. சற்று குறைத்து சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த திருநாராயணசாமி, தமிழ்வாணனை பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசில் தமிழ்வாணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து திருநாராயணசாமியை கைது செய்தார்.

ஆவணங்கள் பறிமுதல்

இதையடுத்து, அவரது வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது 35 நபர்களுக்கு அவர் கந்து வட்டி கொடுத்து வசூல் செய்து வருவதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருநாராயணசாமி மீது கடந்த காலங்களில் தா.பழூர் போலீசில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. கடந்த 1997-ம் ஆண்டு முதல் தா.பழூர் போலீஸ் ரவுடி பட்டியலில் திருநாராயணசாமி பெயர் இடம் பெற்றுள்ளது.

கந்துவட்டி புகாரில் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டதும், அவரது வீட்டில் இருந்து பல நபர்களுக்கு கந்துவட்டி கொடுத்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தா.பழூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story