சேலம் சிறையில் மீண்டும் சம்பவம்:வழிப்பறி வழக்கில் கைதான நபரிடம் செல்போன் பறிமுதல்


சேலம் சிறையில் மீண்டும் சம்பவம்:வழிப்பறி வழக்கில் கைதான நபரிடம் செல்போன் பறிமுதல்
x
சேலம்

சேலம் சிறையில் மீண்டும் வழிப்பறி வழக்கில் கைதான நபர் ஆசன வாயில் மறைத்து வைத்து இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆசன வாயில் செல்போன்

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ஒரு சில கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா பயன்பாடு இருந்து வருகிறது. இதை தடுக்க சிறை காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே கைதி ஒருவர் செல்போனை ஆசன வாயில் மறைத்து வைத்து தேவையான நேரங்களில் கழிவறைக்கு சென்று பயன்படுத்துவதாக சிறை காவலர்களுக்கு தகவல் வந்தது.

இதையடுத்து காவலரின் சோதனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த கைதி ஒருவரது ஆசன வாயில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த சிறிய அளவிலான செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறி வழக்கு

இந்த நிலையில் நேற்று காலை சிறையில் காவலர்கள் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல்லை சேர்ந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட பாண்டி என்பவர் நடப்பது வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஆசன வாயில் செல்போன் மறைத்து வைத்து இருப்பதாக கூறினார்.

இதையடுத்து அவரை கழிவறைக்கு அழைத்து சென்று செல்போனை எடுக்குமாறு அறிவுறுத்தினர். அதன்படி அவர் கழிவறைக்கு சென்று செல்போனை எடுத்து போலீசாரிடம் வழங்கினர். அந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவருக்கு எவ்வாறு செல்போன் வந்தது என்பது குறித்து சிறை காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு தமிழ்செல்வனிடம் கேட்டபோது சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கைதிகளை விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவ்வாறு கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் போதோ அல்லது கோர்ட்டில் இருந்து அவர்களை மீண்டும் சிறைக்கு அழைத்து வரும் போதோ எப்படியோ செல்போன் அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. உடனே அவர்கள் அதை ஆசன வாயில் மறைத்து வைத்து விடுகின்றனர். தீவிர சோதனைக்கு பிறகே அவர்களை ஜெயிலில் அடைக்கிறோம். ஆனால் செல்போனை ஆசன வாயில் மறைத்து வைப்பது தெரிவது இல்லை. இனிமேல் தீவிர சோதனை நடத்தி கைதிகளிடம் செல்போன் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story