செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்


செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும்
x

காட்பாடி அருகே விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று காசிக்குட்டை கிராம மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

வேலூர்

காட்பாடி அருகே விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று காசிக்குட்டை கிராம மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்தனர்.

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மேலும் அவர், மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

செல்போன் கோபுரம்

கூட்டத்தில் காட்பாடி அருகே உள்ள காசிக்குட்டை கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றது. பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக கோபுரம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. தற்போது தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்கள், பறவைகள், விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கே.வி.குப்பம் அருகே உள்ள ரவுத்தம்குப்பம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 19 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. தற்போது மோர்தானா அணை நிரம்பி கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஜல்லி குவாரி இயங்கி வருகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி நீர்வரத்து கால்வாய் வழியாக ஏரிக்கு தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ரேஷன்கடை

வேலூரை அடுத்த பெருமுகை பகுதி மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வார்டு உறுப்பினர் ரேஷன் பொருட்கள் வழங்குகிறார். அவர் சரியான அளவில் பொருட்களை வழங்குவதில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் தனது பணிகளை சரிவர செய்யாமல், பொதுமக்களை அலைக்கழிக்கிறார். இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.


Next Story