கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரம் திருட்டு


கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரம் திருட்டு
x

அன்னவாசல் அருகே பரம்பூரில் செல்போன் கடையில் செல்போன்கள், ரூ.20 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

செல்போன்கள் திருட்டு

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் முஸ்லிம்தெருவை சேர்ந்தவர் அமீர்கான் (வயது 33). இவர், பரம்பூர் கடைவீதியில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் கடையை பூட்டி விட்டு செல்போன் பொருட்கள் வாங்குவதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார். பின்னர் அவரது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என தகவல் வந்ததையடுத்து காரைக்குடி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று காலை இவரது செல்போன் கடைக்கு அருகில் கோழிக்கடை நடத்திவரும் ரபீக் என்பவர் கடையை திறக்க வந்த போது அருகில் இருந்த செல்போன் கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் இதுகுறித்து அமீர்கானுக்கு தகவல் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை

பின்னர் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்ேபான்கள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story