கலெக்டர் அலுவலகத்தில் கேமராவில் கண்காணிப்பு


கலெக்டர் அலுவலகத்தில் கேமராவில் கண்காணிப்பு
x

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை தடுக்க அவர்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து செல்வது வழக்கம்.

இவ்வாறு கொடுத்து வந்த நிலையில் சில இடங்களில் மனுக்களின் மீதும் தங்களின் புகார் மீதும் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிலர் கலெக்டர் அலுவலகம் வந்து நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பலர் தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. மனு கொடுக்க வருபவர்கள் ஒருபுறம் தங்களின் கோரிக்கைக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலும் இன்னும் சிலர் அவர்களை தற்கொலை செயலுக்கு தூண்டுவதுபோல் செயல்படுவதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அனுமதி

இதன்படி மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோரின் உத்தரவின் அடிப்படையில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதையும் முக்கிய வழித்தடங்களை தடுப்பு வேலிகள் அமைத்து ஒருவழிப்பாதை திட்டத்தில் பொதுமக்களை அனுமதிக்கும் வகையில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர். குறைதீர் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கிற்கு செல்லும் பல வழிகளை அடைத்து ஒரு வழியில் மட்டும் போலீசாரின் பலத்த சோதனைக்கு பின்னரே மனுவுடன் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்டுப்பாடு

இதன் தொடர்ச்சியாக தற்போது கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உன்னிப்பாக கவனிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்கொலை முயற்சி மற்றும் தூண்டுதல் முயற்சி போன்றவற்றில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.


Next Story