மேற்கூரையில் பெயர்ந்து விழும் சிமெண்டு காரைகள்


கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் புதிய பஸ் நிலையத்தின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

கும்பகோணம்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இதில் கும்பகோணம் மாநகரம் காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்கள் நிறைய உள்ளன. கும்பகோணத்தை சுற்றிலும் நவக்கிரக கோவில்கள், புராதன கோவில்கள், பாடல்பெற்ற கோவில்கள் உள்ளன. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையும் உள்ளது.

கும்பகோணம் என்றாலே நினைவுக்கு வருவது மகாமகம் தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

ஆன்மிக தலமாக விளங்கும் கும்பகோணத்துக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ரெயில் போக்குவரத்தை போல் பஸ் போக்குவரத்தும் வசதியாக இருப்பதற்காக கும்பகோணத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிய பஸ் நிலையம்

இந்த பஸ்கள் வந்து செல்வதற்கு வசதியாக கும்பகோணம் மாநகரின் மையப்பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை சென்னை, திருப்பதி, பெங்களூரு மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கும்பகோணத்தை சுற்றி உள்ள கோவில்களுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் கும்பகோணத்திற்கு வந்து செல்கின்றனர்.

கோவில்கள் மட்டுமின்றி கும்பகோணம் வெற்றிலைக்கும் மிகவும் பிரசித்தி பெற்றது.

கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம் பட்டுக்கு பெயர் பெற்றது. நாச்சியார்கோவில் பித்தளை குத்துவிளக்கு, பூஜை சாமான்கள் சிறப்பு வாய்ந்தது. இவைகளை வாங்குவதற்காகவும் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் நாள்தோறும் கும்பகோணம் வந்து செல்வார்கள்.

பெயர்ந்து விழும் மேற்கூரைகள்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கும்பகோணம் புதிய பஸ் நிலையம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. பஸ் நிலையத்தில் உள்ள வடிகாலில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும், பஸ் நிலையத்தின் மேற்கூரைகளில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. பல இடங்களில் மேற்கூரைகளில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன.

பயணிகள் அச்சம்

இவையும் அவ்வபோது திடீரென விழுந்து விடுகின்றன. இதன்காரணமாக பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பஸ் நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறையும் பூட்டிக்கிடக்கிறது. இதன்காரணமாக பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய பஸ் நிலைய கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கூரைகளை சீரமைக்க வேண்டும். கழிப்பறையை திறந்து பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


Next Story