விவசாயிகளுக்கான கணக்கெடுப்பு பணிகள்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கான கணக்கெடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வுசெய்தார்.
நாடு முழுவதும் விவசாய திட்டங்கள் விவசாயிகளை நேரடியாக சென்றடைய அவர்களது பெயர், சிட்டா, பட்டா அடங்கல், வங்கி கணக்கு ஆகியவை இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளின் ஆவணங்களை சரிபார்த்து பதிய கணக்கெடுப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''வேளாண்மை தேசிய பொருளாதாரத்தின் உயிர்நாடி ஆகும்.
வேளாண்மையில் அதிக உற்பத்தியை அடைய, விவசாயிகளுக்குத் தேவையான பயிர்வாரியான, பகுதி வாரியான உத்திகளை வகுத்து, கிராமப்புறங்களில் வேளாண் தொழிலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் விவசாயிகளின் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.
ஆய்வின் போது குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன், தாசில்தார் விஜயகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் உமாசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.