மத்திய அரசு தீவிரமாக கண்காணிப்பதால் திட்டங்கள் உரிய காலத்தில் முடிவடைகின்றன -மத்திய மந்திரி பெருமிதம்


மத்திய அரசு தீவிரமாக கண்காணிப்பதால் திட்டங்கள் உரிய காலத்தில் முடிவடைகின்றன -மத்திய மந்திரி பெருமிதம்
x

மத்திய அரசு தீவிரமாக கண்காணிப்பதால் திட்டங்கள் உரிய காலத்தில் முடிவடைவதாக மத்திய மந்திரி ராமேஸ்வர் தெலி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மணலியில் அமைக்கப்பட்டு வரும் இந்திய எண்ணெய் கழகத்தின் நவீன, ஒருங்கிணைந்த உயவு எண்ணெய் திட்ட வளாகத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி நேற்று பார்வையிட்டார்.

பின்னர், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய இணை மந்திரி ராமேஸ்வர் தெலி பேசியதாவது:-

தீவிர கண்காணிப்பு

உலகின் 2-வது பெரிய உயவு எண்ணெய் தொழிற்சாலையாக கருதப்படும் இந்த திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். பொதுவாக, இதுபோன்ற பெரிய தொழிற்சாலை பணிகள் உரிய நேரத்தில் முடிவடைவதில்லை.

ஆனால், மத்திய அரசின் தீவிர கண்காணிப்பு காரணமாக, தற்போது உரிய காலத்தில் திட்டங்கள் முடிவடைகின்றன. சென்னையில் செயல்படவிருக்கும் இந்த உயவு எண்ணெய் தொழிற்சாலைக்கு சாதகமான பல அம்சங்கள் இருக்கின்றன. அருகிலேயே சி.பி.சி.எல். சுத்திகரிப்பு நிலையமும், குழாய் வழி இணைப்புகளுடன் சென்னை மற்றும் எண்ணூர் துறைமுக தொடர்பும் உள்ளன.

தானியங்கி முறையில் செயல்படும்

மேலும், மோட்டார் வாகன தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும், ஏற்றுமதிக்கும் குவி மையமாக சென்னை இருப்பதால், 'இயூ' தரத்துடனான நவீன உயவு எண்ணெய் தேவையை இந்த தொழிற்சாலை பூர்த்தி செய்யும்.

ரோபோக்கள், தானியங்கி குழாய் பாதை, புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகியவற்றுடன் இந்த தொழிற்சாலை முழுமையும் கலத்தல் மற்றும் நிரப்புதல் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து திட்ட வளாக தலைமை பொது மேலாளர் எஸ்.என்.விஜயகுமார், மத்திய மந்திரியிடம் விவரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய எண்ணெய் கழகத்தின் செயல் இயக்குனரும், மாநிலத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களின் தலைவருமான வி.சி.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story