மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் - ராமதாஸ்


மாலத்தீவில் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் - ராமதாஸ்
x

மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதி மீனவர்கள் 12 பேரும் மத்திய அரசின் உதவியால் மீட்கப்பட்டிருக்கும் போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகு இன்னும் மீட்கப்படவில்லை. மீனவர்களின் ஒற்றைப் படகை விடுவிக்க ரூ.2.27 கோடி தண்டம் கட்ட வேண்டும் என்று மாலத்தீவு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது. ரூ.2.27 கோடி தண்டம் கட்ட இயலாது என்பதால், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க முடியாமல் தருவைக்குளம் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக மீனவர்கள் திட்டமிட்டு மாலத்தீவு கடல் எல்லைக்குள் ஊடுருவவில்லை. மாறாக, மோசமான வானிலை காரணமாகவே அவர்களின் படகு மாலத்தீவு கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப்பட்டது. தாங்கள் எல்லை தாண்டி சென்று விட்டதை உணர்ந்த மீனவர்கள், அங்கிருந்து புறப்பட முயன்ற போது தான் மாலத்தீவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, குற்றவாளிகளைப் போல கருதி அவர்களின் படகை மாலத்தீவு அரசு பறிமுதல் செய்திருக்கக் கூடாது.

மத்திய, மாநில அரசுகள் இந்த சிக்கலில் தலையிட்டு, மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டம் செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதை மத்திய, மாநில அரசுகளே செலுத்தி தருவைக்குளம் மீனவர்களின் படகை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story