ஜல்ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
குலசேகரன்ட்டினம் பஞ்சாயத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டப் பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்தில் மத்திய அரசின் சார்பில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் குழுவினர் டாக்டர் சிவராமன், தலைமை பொறியாளர் வெங்கடேஷ்வரராவ் ஆகியோர் ஜல் ஜீவன் மிஷன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தினர். குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்து தலைவர் ரா. சொர்ண பிரியாதுரை தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் இக்குழுவினர் எல்லப்ப நாயக்கன் நீர்த்தேக்க தொட்டி, சாத்தான்குளம் கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் தியாகராஜபுரம் பகுதியில் உள்ள தெரு குழாய்களை ஆய்வு செய்தனர்.
இக்குழுவினரிடம் குலசேகரன்பட்டினத்தில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 2,540 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு தினந்தோறும் 6 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது, ஆனால் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தினசரி 6 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் சொர்ண பிரியாதுரை கோரிக்கை வைத்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இக்குழுவினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பழனிச்சாமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, துணைத் தலைவர் கணேசன், என்ஜினீயர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர் அப்துல் ரசாக் ரசூல்தீன், ஊராட்சி உறுப்பினர்கள், குடிநீர் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.