மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்தின் தொடக்கமாக சங்க கொடியேற்றி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சங்க துணை தலைவர் பால்ராஜ் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இணை செயலாளர் சுமதி, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பிச்சைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை உருவாக்க வேண்டும். மாவட்ட, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும். நகர கூட்டுறவு வங்கிகளை மாவட்ட அளவில் இணைக்க வேண்டும். மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய தொகைக்கு பஞ்சப்படி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள், மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.