தி.மு.க.வை, சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது
தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று மயிலாடுதுறையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மயிலாடுதுறை;
தமிழகத்தில் சிறப்பான திராவிட மாடல் ஆட்சி நடப்பதால் தி.மு.க.வை சி.பி.ஐ. மூலம் மத்திய அரசு அச்சுறுத்துகிறது என்று மயிலாடுதுறையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நேற்று நடந்தது.விழாவுக்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர்மெய்யநாதன், ராமலிங்கம் எம்.பி. பன்னீா்செல்வம் எம்.எல்.ஏ., கட்சியின் செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1000 பேருக்கு தலா 10 ஆயிரம் பொற்கிழியும்(ரூ.10 ஆயிரம்) மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கினார்.முன்னதாக அவர் பேசியதாவது:-
சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தல்
நான் பிறந்தது சென்னை மாவட்டமாக இருந்தாலும் என்னுடைய தாயார் பிறந்த மாவட்டம் மயிலாடுதுறை. கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது எனது பிரசார வாகனத்தை தடுத்து நிறுத்தி என்னை கைது செய்தது இந்த மாவட்டத்தில் தான். இங்கு தொடங்கிய எனது பிரசாரம் தான் தமிழ்நாடு முழுவதும் என்னை பிரசாரம் செய்ய வைத்து தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க அடித்தளமிட்டது.நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாத மத்திய அரசு என்ன செய்வது என்று தெரியாமல் ஐ.டி, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது. நாங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தையே சந்தித்தவர்கள். இதற்கு அச்சப்பட மாட்டோம்.
அதானி
அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து நமது முதல்-அமைச்சர் மத்திய அரசை எதிர்ப்பதால் இது போன்ற அழுத்தத்தை மோடி அரசு கொடுக்கிறது. தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனக்கு கொடுத்த வேலையை விட்டுவிட்டு, கொடுக்காத வேலைகளையும் செய்து வருகிறார். தமிழ்நாட்டின் பெயரை கவர்னர் மாற்ற நினைக்கிறார். கவர்னருக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்.உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள அதானி, மோடியின் நெருங்கிய நண்பர். பிரதமர் மோடி எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் விமானி இல்லாமல் கூட செல்வார், அதானி இல்லாமல் செல்ல மாட்டார்.
அடிமை கட்சி
மத்திய அரசு அ.தி.மு.க.வை தங்கள் அடிமை கட்சியாக வைத்துள்ளது. தி.மு.க.வையும் அடிமைப்படுத்த நினைத்தால் அது நடக்காது. என்னை சின்னவர் என்று பட்டப்பெயர் வைத்து அழைக்காதீர்கள். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்ட அனைத்திலும் சின்னவன்தான். அந்த பட்டப்பெயரை தவிர்த்து விட்டு கலைஞர் வைத்த அழகான உதயநிதி என்ற பெயரை கூறி அழைத்தாலே போதும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சத்தியசீலன், குத்தாலம் அன்பழகன், ஜெகவீரபாண்டியன், அருள்செல்வன், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் ஞானவேலன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், பூம்புகார் ரவி, சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஷாவலியுல்லாஹ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மத்திய ஒன்றிய செயலாளர் ஞான.இமயநாதன் நன்றி கூறினார்.
பேட்டி
விழா முடிவடைந்த பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க., தி.மு.க.வை தொடர்ந்து எதிர்ப்பது தி.மு.க. நல்ல பாதையில் போய்க் கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த தமிழகமே பா.ஜ.க.வை எதிர்க்கத்தான் செய்யும். எந்த காலத்திலும் பா.ஜ.க.வை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜாலியாக போய்க்கொண்டிருப்பதாக கூறினார்.