நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசு தோல்வி


நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசு தோல்வி
x

நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாட்டின் பொருளாதார பிரச்சினையை கையாளுவதில் மத்திய அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

கே.எஸ். அழகிரி பேட்டி

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அடுத்தமாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதயாத்திரையை தொடங்குகிறார். அதற்காக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நாகர்கோவிலில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மத்திய அரசு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரியை விதித்துள்ளது. இது ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.

பொருளாதாரத்தில் தோல்வி

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை கையாளுவதில் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதார பிரச்சினைகளை எளிதாக கையாண்டார். ஆனால் தற்போது பொருளாதாரம் பற்றி மோடி அரசுக்கு தெரியவில்லை. அதனால் மத்திய நிதி மந்திரியை மாற்றாமல், பிரதமரை மாற்ற வேண்டும்.

மராட்டியத்தில் பலம் வாய்ந்த சிவசேனாவை உடைத்து பா.ஜ.க. கட்சி அங்கு மறைமுகமாக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்ற நிலையை பீகாரில் செய்ய அவர்கள் முயற்சித்தனர். அது அவர்களுக்கு மிகப்பெரிய தோல்வியாக அமைந்துள்ளது.

5-ஜி ஏலத்தில் முறைகேடு

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக உள்ளது. ஈரோட்டில் நடந்த நெசவாளர் பிரச்சினை, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி விவகாரத்திலும் முதல்-அமைச்சர் துரித நடவடிக்கை எடுத்தார்.

தேர்தல் அறிக்கையில் கூறியது போல தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 குறைத்துள்ளது. தமிழகத்தில் 75-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவது பாராட்டத்தக்கது. 5-ஜி அலைக்கற்றை ஏலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று உள்ளது. மக்கள் விரும்புவது காமராஜர் ஆட்சியை தான். அது சித்தாந்த முறையில் செயல்படுத்தப்படும். 2024-ம் ஆண்டு ராகுல் காந்தி பிரதமர் பொறுப்புக்கு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story