மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சிறுவன் ஜாமீனில் விடுவிப்பு
கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்டதாக மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலவரம் நடந்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டதாக மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவனை 19 வயது என்று குறிப்பிட்டு சின்னசேலம் போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறுவனின் தந்தை கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிறார் பாதுகாப்பு சட்டத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தனது மகனுக்கு 16 வயது. ஆனால் போலீசார் இதனை மறைத்து 19 வயது என்று குறிப்பிட்டு கைது செய்து கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். தன் மகன் அந்த சம்பவத்தில் ஈடுபடவில்லை. எனவே சிறாரை விடுதலை செய்யக்கோரியும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, சிறையில் அடைக்கப்பட்ட சிறாரை கோர்ட்டில் ஆஜர் படுத்த சின்னசேலம் போலீசாரக்கு உத்தரவிட்டார. அதன்படி சிறுவன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மேலும் சிறுவனின் கல்வி சான்று, மதிப்பெண் சான்று, ஆதார், பிறப்பு சான்றிதழ் ஆகியவையும் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த நீதிபதி, விழுப்புரம் சிறார் நீதி குழுமதிற்கு அனுப்பி வைத்தார். அங்கு விசாரணை செய்த சிறார் குழும நீதிபதி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறுவனை ஜாமீனில் விடுவித்தார்.