அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சு
தாய்மொழி கல்வியை ஊக்குவித்து, அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.
தாய்மொழி கல்வியை ஊக்குவித்து, அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.
அமுத பெருவிழா
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தில் 75-வது ஆண்டு சுதந்திர அமுத பெருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இணை மந்திரி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
விழாவில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-
கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளரும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும். தாய் மொழி கல்வி தான் அதிக பலன் தரும். தமிழகத்தை சோழ மன்னர்கள் ஆண்டபோது பொறியியல் படிப்பு இல்லை. கட்டிட வியல் பயிலாமல் பல கட்டிடங்கள், கோவில்களை தமிழர்கள் கட்டினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான். பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தமிழ் மொழிக்காக பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை ெதாடங்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக்கொள்கை
இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகிறது. பல மொழிகளில் வணக்கம் என்பதற்கு வேறு, வேறு வார்த்தைகள் உள்ளன. ஆனால் 2 கைகளை இணைத்து கும்பிட்டால் வணக்கம் என்பது அனைத்து மொழிகளிலும் புரியும். புதிய கல்வி கொள்கையால் தாய்மொழி கல்வி வளர்ச்சியடையும். புதிய தொழில்நுட்பம், புதுமைகள் புகுத்தப்படும். அறிவு சார்ந்த மாணவர்கள் உருவாக்கப்படுவார்கள். எனவே புதிய கல்வி கொள்கையை பயன்படுத்தி கிராமப்புற வளர்ச்சிக்கு காந்திகிராம பல்கலைக்கழகம் முக்கிய பங்காற்ற வேண்டும். தாய்மொழி கல்வியை ஊக்குவித்து, அதன் மூலம் அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மத்திய இணை மந்திரி முருகன் பேசும்போது, தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய குறிப்புகள் தகவல் ஒளிப்பரப்பு துறை மூலம் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சுயசார்பு பாரதத்தை உருவாக்க பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார். இதுபோன்ற சுயசார்பை தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் சுதந்திர போராட்ட காலத்திலேயே செய்து காட்டினார். 2047-ம் ஆண்டு 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் என்ற மோடியின் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நனவாக்குவோம் என்றார்.
கலந்துகொண்டவர்கள்
முன்னதாக விழாவுக்கு வந்த மத்திய மந்திரிகளை, காந்திகிராம பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு) குர்மித் சிங், பதிவாளர் சிவக்குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் ரஜ்சனிஸ் ஜெய்ன், மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் காமினி சவுக்கான் ரத்தன் மற்றும் பேராசிரியர்கள், சாந்திசேனா மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பதிவாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.