சிறு, குறு, நடுத்தர‌ தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்


சிறு, குறு, நடுத்தர‌ தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
x

வலுவான இந்தியாவை உருவாக்குவதில் சிறு, குறு மற்றும் நடுத்தர‌ தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பானுபிரதாப்சிங் வர்மா கூறினார்.

தஞ்சாவூர்

வல்லம்;

வலுவான இந்தியாவை உருவாக்குவதில் சிறு, குறு மற்றும் நடுத்தர‌ தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பானுபிரதாப்சிங் வர்மா கூறினார்.

தொழில் முனைவோர் மாநாடு

தஞ்சையை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மையம் சார்பில் தேசிய எஸ்.சி, எஸ்.டி. தொழில் முனைவோர் மாநாடு நேற்று நடந்தது.மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணை செயலாளர் மெர்சி எபோ வரவேற்றார். தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

மாநாட்டில் மத்திய மந்திரி பானுபிரதாப்சிங் வர்மா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-தஞ்சையில் நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியினர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தொடங்க, தொழில்நுட்பத்தை செயல்படுத்த இந்த மாநாடு ஒரு தளத்தை உருவாக்குகிறது.சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரால் இந்திய பொருளாதாரத்துக்கான முன்னேற்ற பாதை திறக்கப்பட்டுள்ளது. வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் 6 கோடிக்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

மானிய கடன்

இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமார் 30 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன. இதன் மூலம் 11 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த துறையில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்தியாவில் 1.09 கோடி பேர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க பதிவு செய்துள்ளனர். இதில் 11.46 லட்சம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.தற்போதுள்ள எஸ்.சி., எஸ்.டி. தொழில்முனைவோரின் திறனை வளர்க்கவும், புதிய நிறுவனங்களை உருவாக்கவும், ஆலை, எந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கவும் 25 சதவீத மூலதன மானிய கடன் வழங்கப்படுகிறது. பொருட்கள் ஏற்றுமதி, தயாரிப்புகளின் தரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

விருது

மாநாட்டில் தேசிய பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினாில் தொழில் முனைவோராக செயல்பட்டு வரும் 10-க்கும் மேற்பட்டோரை பாராட்டி விருது வழங்கப்பட்டது. விழாவில் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி., தாட்கோ தலைவர் மதிவாணன், தாட்கோ நிர்வாக இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர், தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story