மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் கைது
சீர்காழி:
சீர்காழியை சேர்ந்த சமையல் மாஸ்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர். உறவினர்களை அவதூறாக பேசியதால், சமையல் மாஸ்டர் தீர்த்து கட்டப்பட்டதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
சமையல் மாஸ்டர் சுட்டுக்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது27). சமையல் மாஸ்டர். இவருக்கு திருமணம் செய்வதற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர் கடந்த 2-ந் தேதி இரவு கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கனிவண்ணனை துப்பாக்கியால் சுட்டவர் யார்? ஏன் கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
மத்திய ரிசர்வ் படை
விசாரணையில் மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமம் உடையூர் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (53) என்பவர் கனிவண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரியவந்தது.
இவர் ஆந்திர மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் ஏன் கனிவண்ணனை கொலை செய்தார்? என்பது பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
உறவினர்கள் குறித்து அவதூறு
மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வந்த தேவேந்திரன், சீர்காழி தென்பாதி ஆர்.வி.எஸ். நகரில் வசித்து வருகிறார். இவரும், கொலை செய்யப்பட்ட கனிவண்ணனும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் தேவேந்திரன், அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் குறித்து கனிவண்ணன் தொடர்ந்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசி வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தேவேந்திரன் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று சீர்காழி அருகே உப்பனாற்றங்கரையில் நின்று கொண்டிருந்த கனிவண்ணனை, தேவேந்திரன் தென்பாதி ஆர்.வி.எஸ். நகரில் உள்ள தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 9 எம்.எம். துப்பாக்கியால் தலையில் சுட்டுக்கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி, தோட்டாக்கள் மறைத்து வைப்பு
பின்னர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் பயன்படுத்தாத தோட்டாக்கள் ஆகியவற்றை தேவேந்திரன் மறைத்து வைத்துள்ளார். தென்பாதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியபோது 22 ரக ஏர்கன் துப்பாக்கி, 315 ரக நாட்டு கைத் துப்பாக்கி, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி உள்பட 4 துப்பாக்கிகள் மற்றும் பயன்படுத்தாத 26 தோட்டாக்கள், கனிவண்ணனின் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று போலீசார் தேவேந்திரனை கைது செய்து சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.