நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  மத்தியக்குழுவினர் ஆய்வு
x

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனா். அப்போது அவர்கள் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனா். அப்போது அவர்கள் விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

நெல் கொள்முதல்

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக இந்த ஆண்டு முன்கூட்டியே மே 24-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

22 சதவீதம்

இதைத்தொடர்ந்து, 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய உணவு கழகத்தின் சேமிப்பு மற்றும் ஆய்வு தரக்கட்டுப்பாடு மைய துணை இயக்குனர் எம்.இசட்.கான், இந்திய உணவு கழகம், தரக் கட்டுப்பாடு பிரிவு தொழில் நுட்ப அலுவலர் சி.யூனிஸ், இந்திய உணவு கழகம் தரக் கட்டுப்பாடு உதவி பொது மேலாளர் குணால்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தரக்கட்டுப்பாடு முதுநிலை மண்டல மேலாளர் செந்தில் ஆகியோர் அடங்கிய மத்தியக்குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

நெல் மாதிரிகள்

முன்னதாக நீடாமங்கலம் அருகே உள்ள பூவானத்தம், முன்னவால்கோட்டை, மன்னார்குடி அருகே உள்ள செருமங்கலம், ஓவர்சேரி, திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருப்பத்தூர், ஆலத்தம்பாடி ஆகிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ள நெல்லில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடைபெற்றது.

கருத்துக்களை கேட்டனர்

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தபோது நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்களை மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.ஆய்வின் போது மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், உதவி கலெக்டர் கீர்த்தனாமணி மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் இருந்தனர்.


Next Story