கர்நாடகா- மராட்டியம் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண குழு அமைக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்
எல்லை பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மராட்டிய அரசு சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி, பீதர், கார்வார் உள்ளிட்ட மராட்டிய எல்லையோர மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இதனால் எல்லையோரத்தில் உள்ள 865 கிராமங்களை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என மராட்டிய அமைப்பினர் நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மராட்டிய அரசு சார்பில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மராட்டிய வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராட்டியத்தின் புனேவில் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்த 8 கர்நாடக அரசு பேருந்துகள் மீது சிவசேனா கட்சியினர் கல்வீசி தாக்கினர். இந்த சம்பவங்களால் இரு மநிலங்களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், மாநில எல்லை பிரச்சினை தொடர்பாக விவாதிக்க இரு மாநில முதல் மந்திரிகளுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்து இருந்தார். இதன்படி, பசவராஜ் பொம்மை மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரும் இன்று டெல்லி சென்று அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க மந்திரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவை இரு மாநிலங்களும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் எல்லை பிரச்சினை என்பது அரசியல் சாசனத்தின் படியே தீர்க்க வேண்டும் என்றும் வீதிகளில் வைத்து தீர்க்க முடியாது எனவும் அறிவுறுத்தினார்.