மதுரையில் விழா: "அ.தி.மு.க. உடைந்துவிட்டது என்றவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பதிலடி தந்துவிட்டது" - 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு


மதுரையில் விழா:  அ.தி.மு.க. உடைந்துவிட்டது என்றவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பதிலடி தந்துவிட்டது - 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திவைத்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
x

“அ.தி.மு.க. உடைந்துவிட்டது என்றவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு சரியான பதிலடியை தந்துவிட்டது” என மதுரையில், 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

மதுரை


"அ.தி.மு.க. உடைந்துவிட்டது என்றவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு சரியான பதிலடியை தந்துவிட்டது" என மதுரையில், 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக பேசினார்.

51 ஜோடிகளுக்கு திருமணம்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி உள்பட 51 ஜோடிகளுக்கு சமத்துவ சமுதாய திருமணம், மதுரையை அடுத்த டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நேற்று நடந்தது.

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் மற்றும் அ.தி.மு.க.வின் பொன்விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் ஜெயலலிதா பேரவை சார்பில் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் இந்த விழா நடந்தது.

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, வைகை செல்வன், மணிகண்டன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் வெற்றிவேல், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்யா, டி.கல்லுப்பட்டி யூனியன் சேர்மன் சண்முகபிரியா, பொதுக்குழு உறுப்பினர் பாவடியான், மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

இந்த திருமணத்தை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு மனிதனுக்கும் திருமண நாள், பொன்னான நாள். அந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

இந்த நன்நாளில் திருமணம் செய்த 51 ஜோடிகளும் தங்கள் இல்லறத்தை தொடங்க இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்.பி.உதயகுமார், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், ஜெயலலிதா பேரவை செயலாளர், எம்.எல்.ஏ. என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இருந்தாலும், அவர் அடக்கத்துடன் இருப்பது தனி சிறப்பு. கடவுள் பக்தி மிக்கவர். அவரது ஏற்பாட்டில் 51 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது மிகவும் சிறப்பு. இந்த திருமண விழாவை நான் நடத்தி வைக்கும் வாய்ப்பு கிடைத்தற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திருமண விழாவில் பங்கேற்க இருந்த சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரப்போகிறது என்று நேற்று (அதாவது நேற்று முன்தினம்) இரவு தகவல் வந்தது.

தூக்கம் வரவில்லை

இந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என்று ஒருவித அச்சம் ஏற்பட்டது. பலரும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இருந்தாலும், எனக்கு இரவில் தூக்கம் வரவில்லை.

இந்த திருமண நிகழ்ச்சிக்காக காலையில் சேலத்தில் இருந்து கிளம்பிய போதுகூட பதற்றம் இருந்தது. இங்கு வந்து சேர்ந்தவுடன், ஆர்.பி.உதயகுமார் இந்த கோவிலில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்துவிட்டு திருமண மேடைக்கு செல்லலாம் என்று கூறினார். என்னோடு வந்த செல்லூர் ராஜூவும், ராஜன் செல்லப்பாவும் ஜெயலலிதாவை முதலில் வணங்குவோம் என்று கூறினர். நானும், நல்ல தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று வேண்டினேன். நான் நினைத்தபடி சில நிமிடங்களிலேயே அ.தி.மு.க.வுக்கு நல்ல தீர்ப்பு வந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தெய்வ பக்தி மிகுந்தவர்கள். அதனால், இந்த தீர்ப்பு தெய்வ சக்தி கொண்ட தலைவர்கள் கொடுத்த வரப்பிரசாதம்.

தி.மு.க.வின் 'பி' டீம்

இன்னும் பல நூற்றாண்டுகள் அ.தி.மு.க. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். இந்த தீர்ப்பு மூலம் அது சாத்தியாமாகி உள்ளது. சில எட்டப்பர்கள், அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்துவிட வேண்டும், முடக்கி விட வேண்டும் என்று நினைத்தார்கள். அவர்கள் தி.மு.க.வின் 'பி' டீமாக செயல்பட்டார்கள். அந்த எட்டப்பர்களின் முகத்திரை இன்று கிழிந்துவிட்டது.

கடந்த 6, 7 மாதமாக அ.தி.மு.க. தொண்டர்கள் பட்ட துன்பங்கள் சொல்லி மாளாது. எதிர்க்கட்சிகள் எல்லாம் அ.தி.மு.க. நான்காக உடைந்து விட்டது என்றார்கள். அவர்களுக்கு சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு சரியான பதிலடி தந்துவிட்டது. அ.தி.மு.க. எப்போதும் ஒன்றுபட்டு இருக்கும். தொண்டர்கள்தான் அ.தி.மு.க.வை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இனி அ.தி.மு.க. ஒன்றாக இருக்கிறது என்று அனைவரும் சொல்ல வேண்டும். இது தி.மு.க. போல் குடும்ப கட்சி கிடையாது. மக்களுக்காக உழைக்கும் கட்சி.

மதுரை மண்ணில் நல்ல செய்தி

மதுரை மண்ணில் கால்வைத்தாலே நல்ல செய்திதான் கிடைக்கும். அதிலும் திருமங்கலத்தில் உள்ள ஜெயலலிதா கோவிலில் வேண்டினால் நினைத்தது எல்லாம் நடக்கும். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பே ஒரு சாட்சி. ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு, இந்த கோவில் புத்துயிரூட்டி உள்ளது. இனி அ.தி.மு.க. என்ற இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டு பார்க்க முடியாது. இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வினர், எப்படியாவது அ.தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அதற்காக அ.தி.மு.க. மீது பொய் வழக்கு போடுகிறார்கள். எதற்கும் நாங்கள் அஞ்சுபவர்கள் அல்ல. வீரமானவர்கள். தைரியமானவர்கள்.

இன்று திருமணம் செய்துள்ள 51 ஜோடிகளும் ராசியானவர்கள். அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்த நாள் அவர்கள் திருமண நாள். தமிழகத்திலே வலிமையான கட்சியாகவும், அதிகமான தொண்டர்கள் உள்ள கட்சியாகவும் அ.தி.மு.க. திகழ்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஏழை வாக்காளர்களை ஆடு, மாடுகள் போல் அழைத்துச் சென்று கொட்டகையில் அடைத்து வைக்கிறார்கள். இது போன்ற தி.மு.க.வின் முறைகேடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரி மற்றும் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இடைத்தேர்தலில் திருமங்கலம் பார்முலாவை தி.மு.க. கொண்டு வந்தது. இப்போது ஈரோட்டில் புது பார்முலாவை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக வாக்காளர்களை அடைத்து வைத்து ஜனநாயக படுகொலையை செய்கிறார்கள். ஆனால் வாக்காளர்கள் உறுதியாக அ.தி.மு.க.வுக்குத்தான் வாக்களிப்பார்கள். வாக்காளர்களை நம்புகிறோம். அவர்கள்தான் நீதிபதிகள்.

அடுத்தடுத்து வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதியில் நமது வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டத்தில், பா.ஜனதா கட்சியை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்து விட்டது. இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சாதகமாக வந்து நமக்கு 2-வது வெற்றியை கொடுத்து இருக்கிறது. 3-வது வெற்றி என்பது ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story