கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்


கோடைகால விளையாட்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்
x

நாகர்கோவிலில் நடந்த 15 நாள் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் நடந்த 15 நாள் கோடை கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் சான்றிதழ் வழங்கினார்.

நிறைவு விழா

நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 15 நாட்களாக கோடைகால இலவச பயிற்சி முகாம் நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் குமரி மாவட்ட பிரிவு சார்பில் விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்றது.

சீருடை- சான்றிதழ்

இந்த பயிற்சியின் நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி வழங்குதல் மற்றும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதும் ஆகும். இந்த பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி மற்றும் கைப்பந்து என 5 விளையாட்டிற்கான பயிற்சியானது தினசரி காலையில் 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலையில் 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்துக்காக பால் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக முகாம் நிறைவு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசினார்.

சான்றிதழ்

முன்னதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதரின் மகன் விதாத் பொனுகு கால்பந்து பயிற்சி மேற்கொண்டமைக்காக கலெக்டர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரி ராஜேஷ், கலெக்டரின் மனைவி விஜெதா அன்னிமல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story