சாதி, மதம் அற்றவர்கள் என சிவகாசி தம்பதிக்கு சான்றிதழ்


சாதி, மதம் அற்றவர்கள் என சிவகாசி தம்பதிக்கு சான்றிதழ்
x

சாதி, மதம் அற்றவர்கள் என சிவகாசி தம்பதிக்கு சான்றிதழ்

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் சில நாட்களுக்கு முன்பு சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வழங்க வேண்டும் என்று விண்ணப்பம் அளித்தார். விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுவரை இப்படி சான்றிதழ் யாருக்கும் கொடுத்தது இல்லை என்று கூறினர். அப்போது கார்த்திகேயன், இந்தியாவில் இதுவரை 7 பேர் சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் பெற்றுள்ளார்கள். அதில் 6 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வழங்கி உள்ளார்.

பின்னர் சில நாட்கள் கழித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவருடைய மனைவி சர்மிளா ஆகிய இருவருக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என்ற சான்றிதழை வழங்கி உள்ளனர்.

இதுகுறித்து கார்த்திகேயன் கூறும்போது, "எனது சொந்த ஊர் சிவகாசி. சில ஆண்டுகளுக்கு முன்னரே சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு மனு கொடுத்தேன். அப்போது வழங்க மறுத்துவிட்டனர். ஆனால் அந்த சான்றிதழ் பெற தேவையான ஆவணங்களை சேகரிக்க தொடங்கினேன். இணையதளத்தில் அதற்கான தகவல்கள் கிடைத்தன, கடந்த 2018-ல் வக்கீல் சினேகா என்பவர் இதே போன்ற சான்றிதழை பெற்று இருந்தார். இதை ஆதாரமாக வைத்து சாதி, மதம் அற்றவர்கள் என்று எனக்கும், என் மனைவிக்கும் சான்றிதழ் பெற்றுள்ளேன். நான் சுயதொழில் செய்து வருகிறேன். எனது மனைவி சர்மிளா உதவி பேராசிரியையாக உள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள். மூத்த மகன் நேசன்(4) யு.கே.ஜி. படித்து வருகிறான். அவனுக்கும் சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறேன். 2-வது மகன் கரிகாலனுக்கு தற்போது 2 வயதுதான் ஆகிறது. அவனுக்கும் இதே சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story