வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்


வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தம்
x

உப்பளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வேலையின்றி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.

நாகப்பட்டினம்

தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யம் உள்ளது. வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் அகஸ்தியம்பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைக்கப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகையான உப்பும் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மதிப்பு கூட்டப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாருதல், வெளியிடங்களுக்கு லாரிகளில் ஏற்றி அனுப்புதல் ஆகிய பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையால் நிறுத்தம்

இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வரும் மழையின் காரணமாக உப்பளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும், மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், இந்த தொழிலில் ஈடுபட்ட வந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

வேலையிழப்பு

இதுகுறித்து இந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் சிலர் கூறுகையில், வேதாரண்யம் பகுதியில் அதிகளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உப்பு லாரிகளில் ஏற்றப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தற்போது இப்பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நாங்கள் வேலையின்றி தவித்து வருகிறோம். இன்னும் சில நாட்களில் தீபாவளி வருவதால் பண்டிகையை எப்படி கொண்டாடப்போகிறோம் என்று தெரியவில்லை. எங்களுக்கு அரசு சார்பில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story